Saturday 3 March 2018

குழந்தைகளை கையாளுவது எப்படி

உலகமே வியந்து போகும் அளவிற்கு அற்புதம் நிறைந்த குழந்தைகளை கையாளுவது என்பது தனித்திறமை மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கு அது சவாலாகவே இருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களால் முடிந்தவரை இனிமையாகவே கையாளுகிறாராகள். மேலும் சிலர் எப்படி சிறப்பாக குழந்தைகளை வளர்ப்பது என்று தேடி படித்த வண்ணம் இருக்கிறார்கள். • குழந்தைகளின் வெற்றிக்கு ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் குழந்தைகளை பொறுத்தவரை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வளர்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்வில் வெற்றிகளும், சாதனைகளும் நிச்சயம் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உணவு பெரும் பங்கு வகிப்பதை அனைவரும் அறிவோம். அறிந்த விஷயத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து எளிதாக அமைகிறது. என் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்வார் என்று மனதில் திடமாக நினைக்கும்பொழுது அதற்கான வழிகளும் எளிதாக்கப்படுகிறது. சமச்சீராக சாப்பிடும் பொழுது மட்டும் தான் அனைத்து வித சத்துக்களும் குழந்தைகளுக்கு போய் சேருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நாளில், ஒரு உணவை ஒரு முறை சாப்பிட்டால் போதும், அடுத்த நேரத்திற்கு வேறு உணவை சாப்பிடுதல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அதாவது, ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று வகையான பழங்கள், அதிகபட்சம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வகை. அதேபோல் மூன்றிலிருந்து நான்கு வகையான காய்கறிகள், கீரைகள், பருப்பு மற்றும் தானியங்கள், உலர்ந்த பழங்கள், ஒரே ஒரு டம்ளர் பால் என்று அனைத்து வித இயற்கை உணவுகளும், ஒரே ஒரு முறை என்ற விகிதத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள் என்பதை உறுதிபடுத்தி விட்டீர்கள் என்றால் குழந்தைகள் முழுமையான ஆரோக்கிய வாழ்க்கை வாழ்கிறார்கள் என்கிற மகிழ்ச்சி பெற்றோர்களுக்கு பெருமிதத்தை அதிகப்படுத்தும். • தூக்கத்தின் முக்கியம் குழந்தைகளின் தூக்கமும் அவர்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும். குழந்தைகள் நேரத்தில் தூங்கி, நேரத்தில் எழுந்திருப்பது, நீங்கள் எழுப்பாமல் என்றாள் அது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ளும் பொழுது, குழந்தைகளிடம் அந்த பழக்கத்தை கொண்டு வருவது எளிதாக இருக்கும். எப்படி என்றால் நாம் மனதில் எதை கொண்டுவருகிறோமோ அதற்கு தகுந்தாற்போல் உடலும் மனமும் வேலை செய்யும். நல்ல தூக்கம், நேரத்தில் தூங்குதல் பற்றி ஆழமான அறிவு இருக்கும் ஒருவரால், குழந்தைகளுக்கு அந்த அறிவை கொண்டு செல்வது இயல்பானதாகவே இருக்கும். குழந்தைகள் அழகானவர்கள் மட்டும் இல்லை அறிவானவர்களும் கூட. நாம் சொல்லும் வார்த்தைகளையும் அதன் அர்த்தங்களையும் எளிதாக புரிந்துகொள்பவர்கள். • உணவும் ஆரோக்கியமும் எது பெற்றோர்களுக்கு தேவையோ, குழந்தைகள் என்ன செய்தால் பிடிக்குமோ அதைபற்றிய சிந்தனைகளை உருவாக்கிவிட்டால் அது மட்டும் தான் நடக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நாம் அக்கறை காட்டுகிறோம் என்றால் அதற்கான வேலைகளை செய்வதும் நமக்கு பிடித்தே இருக்கும். குறிப்பாக பழங்கள் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் பழங்களை எடுத்து, கழுவி, அறுத்து, பரிமாற ஆகும் நேரம் நம் குழந்தையின் ஆரோக்கியத்திற்க்குத்தான் என்று நினைக்கும் பொழுது என்னதான் நம் கண் முன்னே பிஸ்கட் போன்ற பேக்கட்டில் அடைத்த ஆரோக்கிய குறைபாடுகளை உருவாக்கும் பொருட்கள் இருந்தாலும், அதை நாம் தவிர்ப்பது என்பது நம் பழக்கமாகவே மாறிவிடும். ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் உடல் உபாதைகள் இயற்கையே. அந்த நேரத்தில் பெற்றோர்களின் பொறுமை மற்றும் நல்ல எண்ணங்கள் மிக முக்கியம் என்று உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உடல் உபாதைகள் நேரும்பொழுது இதனால் நம் குழந்தையின் உடல் மேலும் சுத்தமாகி கொண்டிருக்கிறது, எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது என்றும், இதனால் நல்லதுதான் நடக்கும் என்ற நம்பிக்கையையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். மருந்துகள் அதிகம் தவிர்த்து இயற்கை முறையில் குணப்படுத்த நினைத்தீர்கள் என்றால் அது குழந்தைகளின் பிற்கால வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொடுப்பதோடு அவர்கள் ஆரோக்கியமானவர்களாகவே இருக்கவும் செய்கிறார்கள். இப்படியாக ஆரோக்கிய குழந்தைகளை உருவாக்கிய உங்களுக்கு மகிழ்ச்சியான குழந்தைகளை உருவாக்குவதும் முடிந்த ஒன்றே. • குழந்தைகளின் மகிழ்ச்சி பெற்றோர்களின் எண்ணம் அழுத்தமாகவும், ஆழமாகவும் எதை நினைக்கிறதோ, நம்புகிறதோ அதன் மூலமாக உருவாகும் செயல்கள் மற்றும் நடத்தைகளுக்கு ஆற்றலும், சக்தியும் மிக மிக அதிகம். மகிழ்ச்சியான குழந்தைகளால் பல வெற்றிகளை கொண்டாட முடியும் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் பெற்றோர்கள் நினைத்தால் குழந்தைகளை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைக்க முடியும் என்பதும் உண்மையே. குழந்தைகளை முத்தமிடுவதும், கட்டியணைப்பதும், பாராட்டி பேசுவதும், நல்ல விதமாக நேரத்தை குழந்தைகளிடம் உபயோகிப்பதும், அவர்கள் என்ன செய்தால் பெற்றோர்களுக்கு பிடிக்குமோ அதைப்பற்றிய உரையாடலை அதிகப்படுத்துவதும், சிரிப்பை தூண்டிவிடும் விளையாட்டுகளை அதிகமாக விளையாடுவதும், அவர்களுக்கு பிடித்த விஷயத்திற்கு நாம் வேலை செய்து கொடுப்பதும், அவர்கள் எது நினைத்தாலும் அது நடப்பதற்க்கு நாம் உதவி செய்வதும், அவர்கள் எந்த வேலை செய்தாலும் நாம் உதவுவோம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்கி விட்டாலும், அவர்களின் மன நிலையில் எப்பொழுதும் ஒருவித மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். இம்மாதிரியான மகிழ்ச்சி உணர்வுகள் இனிமையான நினைவுகளாக மாறும். இனிமையான நினைவுகளை அதிகம் உருவாக்கிவிட்டீர்கள் என்றால் அது குழந்தைகளின் வாழ்க்கையில் மன மகிழ்ச்சி, நிறைவு, புதுமை, சாதனை என பெரிய பெரிய முன்னேற்றங்கள் நிலைத்து நிற்க காரணம் ஆகிவிடும். • பெற்றோர்களின் அரவணைப்பு குழந்தைகள் பெற்றோர்களுக்கு பிடிக்காத காரியங்களை செய்து விட்டால் அதைப்பற்றி பேசாமலும், கண்டு கொள்ளாமலும், விட்டுவிட்டால் அந்த குழந்தை அந்த காரியத்தை திரும்ப செய்வது குறையும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்களுக்கு பிடித்த மாதிரி செய்துவிட்டால் அதை பாரத்துவதும், அதைப்பற்றி அதிகமாக பேசுவதும், குழந்தைகளின் நல்ல பழக்க வழக்கத்தை அதிகப்படுத்தும் என்பதும் உண்மையானவையே. குழந்தைகளுக்கு நல்ல விதமான உணர்வுகளை அதிகபடுத்தி விட்டோம் என்றால் அவர்களின் உடம்பில் நிணநீர் ஓட்டம் சமமாக இருக்கும். அதனால் அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மட்டுமில்லாமல் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். மகிழ்ச்சியான குழந்தைகள் தன்னம்பிக்கையோடும், சுய மதிப்போடும், படிப்பில் ஈடுபாடுடனும், தன் வேலைகளை செய்யவும், பொறுப்புணர்வோடும், சுயமாக கற்கும் திறன் கொண்டவர்களாகவும், படிப்பில் முழுமையன கவனத்தோடும், இருப்பார்கள் என்பதெல்லாம் உளவியல் ஆராய்ச்சிகளில் அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது. • முடிவாக குழந்தைகளை கையாளும் பெற்றோர்கள் உணவில் கவனத்தையும், , நல்ல தூக்கத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், அரவணைப்பயும், நல்ல வார்த்தைகளை அதிகம் பகிர்ந்தும் செயல்படும் பொழுது குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உருவாக்கிறார்கள். மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கி கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். Mehar M.Sc., Ph.D., (Psychology). Happiness Coach & Motivational Speaker VISUAMIND – School for Happiness 8870209982 meharun@gmail.com